சு.செல்வக்குமார் (20.10.21)
வணக்கம்
கொங்குப்பகுதியில் -“கோடம(ழ)ழை"என்பது
சித்திரையில் சீர்கூட்டி
வைகாசியில் வாய்திறந்து
ஆனி,ஆடியில் அடைமழை யாகப்
பொழிவதாகும். “கோடமழை (தென்மேற்குப்பருவமழை)குறித்துக் கொங்குப்பகுதியில் (மேகொங்கு) வழக்கில் உள்ள பழமொழி. குடக்குத்திசை என்பது மேற்குத் திசை. மேற்குத்திசையிலிருந்து வீசும் காற்றால் (குளிர் காற்றும் ஆகும்) பெய்யும் மழையானது குடக்கு மழை-குட மழை என்றாகி இறுதியில் “கோட மழை“ எனப்பேச்சு வழக்கில் மருவிய பெயர் பெறுகிறது. சாரல் மழையைக் கோட மழை என அழைக்கும் வழக்கும் இப்பகுதியில் தோன்றிவிட்டது.
”ஆடியில்
மாடு கண்டு களி(ழி)க்கும்
மனிதன் உண்டு களி(ழி) ப்பான் ” என்ற பழமொழியும் இங்கு உண்டு. இது மழைப்பொழிவினால் நிகழும் செழிப்பை எடுத்துக்காட்டும் பழமொழி.
இந்த மழைப்பொழிவு உள்ள பகுதியில் இருக்கும் தென்னை மரங்கள் மற்ற பகுதிகளைவிடச் செழித்திருக்கும். பாலக்காட்டுக்கணவாயின் அமைப்பு இப்பகுதி சூழலியலுக்கும் மக்கள் வாழ்வியலுக்கும் ஒரு சிறப்பு!
”காற்றே வா
மலையாளக் காற்றே வா
இளங்காலைப் போதில்
தெருவே மணக்கவரும் பூக்காரி போல்
வாசனை நடைபோட்டு வா
தாய்வீடு வரும்
செல்வமகள் உனக்கு
அடையா நெடுங்கதவாய்த்
திறந்தே கிடக்கும்
பாலக்காட்டுக் கணவாய்
அரபிக்கடலின் நீலச்சுரங்கத்தில்
புதையல் எடுத்து
திமிரோடு கரையணைக்கும்
அலைச்சுகத்தை அள்ளிவா
சங்கம்புழைக் கவிதைகள் போல்
அடர்ந்து செறிந்த தேக்குமரக் காடுகளில்
தோளில் உராய்ந்து வா
தென்னை மரங்களைக் கதகளி ஆடவிட்டு
மிளகுக்கொடியோடு
கண்ணாமூச்சி ஆடிவா
பச்சைக் கிளிகளைப் போல்
பலா இலைகள் பறக்கவும்
மஞ்சள் கிளிகளைப் போல்
தாழம்பூக்கள் சிறகடிக்கவும்
விந்தைகள் செய்யும் மோகினி வா
கோடையில்
குருவாயூர்ச் சந்தனம் ஆவதும்
குளிர்காலத்தில்
காதலியின் பெருந்தனம் ஆவதும்
உன் வாடிக்கை
ஆடிமாதம்(உன் கற்கடகமாதம்)
தமிழ்நாடே வெயிலில் கிறங்கும்
என்கணவாய் வாசலில்
முகில் தங்கம் இறங்கும் .
அது உன் கால வர்ஷம்
பாலகாட்டு மணியின்
மிருதங்க ஆவர்த்தனமாக
எரிமேலிப் பேட்டை துள்ளலாக
பளிங்கு மழைப்பந்து
விளையாடி வருகிறாய்
தகித்த எங்கள் மண்ணுக்கு
அம்பலப்புழைப் பாயாசமாய் வருகிறாய்.” என்று கவிஞர் சிற்பி
”ஒரு கிராமத்து நதி” (கவிதைத் தொகுப்பு) யில் கவி பாடுவதும் இந்தக் கோட மழை தரும் கோடக் காற்றையே!
”ஒரு கிராமத்து நதி” (கவிதைத் தொகுப்பு) யில் கவி பாடுவதும் இந்தக் கோட மழை தரும் கோடக் காற்றையே!
எந்நாடுடைய இயற்கையே போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக