புதன், 20 அக்டோபர், 2021

கொங்குப்பகுதியில் -“கோடமழை"

சு.செல்வக்குமார் (20.10.21)

வணக்கம்

கொங்குப்பகுதியில் -“கோடம(ழ)ழை"என்பது

 சித்திரையில் சீர்கூட்டி

வைகாசியில் வாய்திறந்து

ஆனி,ஆடியில் அடைமழை யாகப்

பொழிவதாகும். “கோடமழை (தென்மேற்குப்பருவமழை)குறித்துக் கொங்குப்பகுதியில் (மேகொங்கு) வழக்கில் உள்ள பழமொழி. குடக்குத்திசை என்பது மேற்குத் திசை. மேற்குத்திசையிலிருந்து வீசும் காற்றால் (குளிர் காற்றும் ஆகும்) பெய்யும் மழையானது குடக்கு மழை-குட மழை என்றாகி இறுதியில் “கோட மழை“ எனப்பேச்சு வழக்கில் மருவிய பெயர் பெறுகிறது. சாரல் மழையைக் கோட மழை என அழைக்கும் வழக்கும் இப்பகுதியில் தோன்றிவிட்டது.
ஆடியில்
மாடு கண்டு களி(ழி)க்கும்
மனிதன் உண்டு களி(ழி) ப்பான் ” என்ற பழமொழியும் இங்கு உண்டு. இது மழைப்பொழிவினால் நிகழும் செழிப்பை எடுத்துக்காட்டும் பழமொழி.
இந்த மழைப்பொழிவு உள்ள பகுதியில் இருக்கும் தென்னை மரங்கள் மற்ற பகுதிகளைவிடச் செழித்திருக்கும். பாலக்காட்டுக்கணவாயின் அமைப்பு இப்பகுதி சூழலியலுக்கும் மக்கள் வாழ்வியலுக்கும் ஒரு சிறப்பு!
      ”காற்றே வா
    மலையாளக் காற்றே வா
                                                                                                             
    இளங்காலைப் போதில்
    தெருவே மணக்கவரும் பூக்காரி போல்
    வாசனை நடைபோட்டு வா
    
    தாய்வீடு வரும்
    செல்வமகள் உனக்கு
அடையா நெடுங்கதவாய்த்
    திறந்தே கிடக்கும்
    பாலக்காட்டுக் கணவாய்
    
    அரபிக்கடலின் நீலச்சுரங்கத்தில்
    புதையல் எடுத்து
    திமிரோடு கரையணைக்கும்
    அலைச்சுகத்தை அள்ளிவா
    சங்கம்புழைக் கவிதைகள் போல்
    அடர்ந்து செறிந்த தேக்குமரக் காடுகளில்
    தோளில் உராய்ந்து வா
    தென்னை மரங்களைக் கதகளி ஆடவிட்டு
    மிளகுக்கொடியோடு
    கண்ணாமூச்சி ஆடிவா

    பச்சைக் கிளிகளைப் போல்
    பலா இலைகள் பறக்கவும்
    மஞ்சள் கிளிகளைப் போல்
    தாழம்பூக்கள் சிறகடிக்கவும்
    விந்தைகள் செய்யும் மோகினி வா
    கோடையில்
    குருவாயூர்ச் சந்தனம் ஆவதும்
    குளிர்காலத்தில்
    காதலியின் பெருந்தனம் ஆவதும்
    உன் வாடிக்கை

    ஆடிமாதம்(உன் கற்கடகமாதம்)
    தமிழ்நாடே வெயிலில் கிறங்கும்

    அப்போது உன் தோளிலிருநது
    என்கணவாய் வாசலில்
    முகில் தங்கம் இறங்கும் .
    அது உன் கால வர்ஷம்
    
    பாலகாட்டு மணியின்
    மிருதங்க ஆவர்த்தனமாக
    எரிமேலிப் பேட்டை துள்ளலாக
    பளிங்கு மழைப்பந்து
    விளையாடி வருகிறாய்
    தகித்த எங்கள் மண்ணுக்கு
    அம்பலப்புழைப் பாயாசமாய் வருகிறாய்.” என்று கவிஞர் சிற்பி
    ”ஒரு கிராமத்து நதி” (கவிதைத் தொகுப்பு) யில் கவி பாடுவதும் இந்தக்                                 கோட மழை      தரும் கோடக் காற்றையே!

     எந்நாடுடைய இயற்கையே போற்றி!

செவ்வாய், 19 அக்டோபர், 2021

கொங்கு வட்டாரப்புதினங்கள் (நாவல்கள்)

சு.செல்வக்குமார்.வணக்கம்!    அக்.19-021

    வட்டார இலக்கியங்கள் வரிசையில் கொங்கு வட்டாரப்புதினங்களுக்குத் தனித்த இடமுண்டு. கொங்கு வட்டாரப்புதினங்களுக்கு  ”முன்னத்தி ஏர்” ஆக விளங்குபவர் ஆர். சண்முகசுந்தரம். இவரைத் தொடர்ந்து பல புதின எழுத்தாளர்கள்   பல புதினங்களை எழுதி வந்துள்ளார்கள். வாசகர்களுக்கும்  ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் கொங்குப்புதினங்கள் ஆசிரியர்கள், கொங்குப்புதினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த தரவுகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

ஆர்.சண்முக சுந்தரம்-     நாகம்மாள் (முதல் வட்டாரப்புதினம் (1942), அறுவடை, கனாச்சுனை, சட்டிசுட்டது, தனிவழி, பனித்துளி, பூவும்பிஞ்சும். 

பண்ணன் -

கு. சின்னப்பபாரதி    - சங்கம்,சர்க்கரை, தாகம், பவளாயி, சுரங்கம்

இரா.வடிவேலன்    -தொட்டிக்கட்டு வீடு

பெருமாள் முருகன்- ஏறுவெயில், கூளமாதாரி, மாதொருபாகன்

சி.ஆர். இரவீந்திரன்-    பழைய வானத்தின் கீழே. அங்குத்தாய், ஈரம்கசிந்த நிலம். காக்கைப்பொன், வெயில் மழை, காலம்,மஞ்சுவெளி, ஓடைப்புல்,காற்றே கனலே, செந்தூரச்சாரல். தேயிலைக் கொழுந்து, மணியபேரா, கண்ணில் மின்னல், இரும்புச்சுவர்கள்

சூர்ய காந்தன்- மானாவாரி மனிதர்கள், அம்மன் பூவோடு, பூர்வீக பூமி, எதிரெதிர் கோணங்கள். கிழக்குவானம், விதைச்சோளம். கல்வாழை, ஒருவயல் வெளியின்கதை, அழியாச்சுவடு, முள் மலர் வேலி,பிரதி பிம்பங்கள்

மா.நடராசன்- ஒண்டிக்காரன் பண்ணையம். ஊர் கலைஞ்சு போச்சு. குன்னம். விசக்கடி. சாம்பல் மேடு.

பழமன்- நந்தியாவட்டம், தலைச்சுமை, ஒத்தப்பனை, கள்ளிக்கென்ன வேலி, மொட்டை(எ) மாணிக்கம்(குறும்புதினம்).

ப.க.பொன்னுசாமி    -படுகளம், திருமூர்த்தி மண்(படுகளம்-2)

பட்சி        - கல்லாங்காடு

ஆய்வுகள்- 1.முனைவர் இரா. இளவரசு ”கொங்கு வட்டாரப்புதினங்களில் மக்கள் வாழ்வியல்”

2. முனைவர் சு. செல்வக்குமார் ”கொங்குப்புதினங்களில் பண்பாட்டுப்பதிவுகள்”

தொடரும்...

கவிதைகள்

 இளவேனில்காலம் மலர்ச்சி  ஆனது.....? பூத்துக்குலுங்கும் வேம்புகள்! எக்காலத்திலும் உணவைச் சேகரிப்பதில்லை பறவைகள்! அவைகளையும் அவைகளின் உணவுகளைய...